“நாம் தோற்கவில்லை – பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டோம்” – ரொனால்டோவின் மனைவி ஆதங்கம்!

போர்ச்சுகலுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போர்ச்சுகலின் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மீண்டும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இடம்பெறவில்லை.
42ஆவது நிமிடத்தில் மொரோக்கோவின் யூசெஃப் என்-நெஸ்ரி (Youssef En-Nesyri) ஆட்டத்தின் வெற்றி கோலை அடித்தார்.
ரொனால்டோ ஆட்டத்தின் 2ஆம் பகுதியில் விளையாடினார். கோல் அடிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. ஆட்டம் முடிந்ததும் கண்ணீர் மல்க அரங்கத்தை விட்டு வெளியேறினார், ரொனால்டோ.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் துணைவி ஜார்ஜினா ரொட்ரிகிஸ் (Georgina Rodriguez) அவரது Instagram பக்கத்தில் தமது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
“இன்று உமது நண்பர், பயிற்றுவிப்பாளர் தவறான முடிவை எடுத்துவிட்டார். நீங்கள் ஆட்டத்தின் 2 ஆம் பகுதியில் விளையாட ஆரம்பித்ததும் ஆட்டம் மாறியது.
உங்களை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விளையாட வைத்திருக்கலாம். ஆனால் தாமதமாகிவிட்டது.
வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். இன்று நாம் தோற்கவில்லை. பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டோம். உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
ஜார்ஜினா அவரது ஆதங்கத்தை ஒருபக்கம் வெளிப்படுத்த, “ரொனால்டோ முழு ஆட்டத்தை விளையாடாமல் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர் திறமையான விளையாட்டாளர். ஆட்டத்திற்குத் தேவையான கட்டத்தில் அவர் விளையாடினார்,”
என்று போர்ச்சுகலின் பயிற்றுவிப்பாளர் ஃபெர்னாண்டோ சாந்தோஸ் (Fernando Santos) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|