பாகிஸ்தான் அணியை விரட்டியடித்த இந்தியா!

Monday, September 24th, 2018

ஆசியக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பைத் தொடரின் சூப்பர் 4-ன் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது, அதன் படி பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பர்கார் ஜாமன் களமிறங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இமாம் உல் ஹக் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் பர்கார் ஜாமன் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த பாபர் அஜாம் 9 வெளியேற, சர்பரஸ் அகமது ஜோடி சேர்ந்த சோபிப் மாலிக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடி வந்த அணியின் தலைவர் சர்பராஸ் அகமது 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ஒரு புறம் பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், தனி ஒருவனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மாலிக் அரைசதம் அடித்து 78 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, பாகிஸ்தான் அணி இறுதியாக 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் பும்ரா, சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தல 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அகமது பந்து வீச்சாளர்களை தொடர்ந்து மாற்றிய போதும், ரோகித்-தவான் ஜோடி நாலா புறமும் வெளுத்து வாங்கியது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 210 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சதம் அடித்த தவான் 114 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான ரோகித் 111 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றியை பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய அணி இறுதியாக 39.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related posts: