தொடரை இழந்தது பாகிஸ்தான்!

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் உலக சாதனையுடன் வெற்றி பெற்ற இங்கிலாந்து இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே தொடரை 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்தது.
மேற்படி ஓட்ட எண்ணிக்கையின் மூலம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இனிங்ஸொன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து ஏற்படுத்திக் கொண்டது. இதற்கு முன்னர், 2006ஆம் ஆண்டு, நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கையணி பெற்ற 443 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.
அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் ஹேல்ஸ் 171(122), ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 90(51), ஜோ ரூட் 85(86), ஒயின் மோர்கன் 57(27) ஓட்டங்களைப் பெற்றனர்.
இதில், அலெக்ஸ் ஹேல்ஸ் பெற்ற 171 ஓட்டங்களே, இங்கிலாந்து வீரரொருவரால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் ஆகும். இதற்கு முன்னர், 1993ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக றொபின் ஸ்மித்தால், ஆட்டமிழக்காமல் பெறப்பட்ட 167 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. இது தவிர, இப்போட்டியில், 22 பந்துகளில், பட்லர் அரைச்சதத்தை கடந்திருந்த நிலையில், இங்கிலாந்து வீரரொருவரால் பெறப்பட்ட வேகமாக அரைச்சதம் இதுவாகும். இதற்கு முன்னர், போல் கொலிங்வூட் 24 பந்துகளில் அரைச்சதம் பெற்றிருந்தார்.
பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி சார்பாக, ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் மொஹமட் நவாஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். வஹாப் றியாஸ், தனது 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாவது மோசமான பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்து கொண்டார். இரண்டு அணிகளும் 400 ஓட்டங்கள் குவித்த, 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில், அவுஸ்திரேலியாவின் மைக் லூயிஸ் 113 ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததே மோசமான பெறுதி ஆகும்.
பதிலுக்கு, 445 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 169 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மொஹமட் ஆமிர் 58(28), ஷர்ஜீல் கான் 58(30), சப்ராஸ் அஹமட் 38(43), மொஹமட் நவாஸ் 34(36) ஓட்டங்களைப் பெற்றனர். இதில், 22 பந்துகளில் அரைச்சதம் பெற்ற ஆமிர், 11ஆவது இலக்க வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்து கொண்டார். இதற்கு முன்னர், 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில், இங்கிலாந்துக்கெதிராக ஷோய்ப் அக்தர் பெற்ற 43 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.
பந்துவீச்சில், இங்கிலாந்தி அணி சார்பாக, கிறிஸ் வோக்ஸ் நான்கு, அடில் ரஷீட் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார்.
Related posts:
|
|