மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

Monday, August 26th, 2019

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்கள் எடுத்திருந்த போதே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதன்பிறகு ஆட்டத்தின் இரண்டாவது பாதியை ஆடிய இந்திய அணி 343 ரன்கள் குவிந்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜின்கியா ரஹானே 102 ரன்களும், ஹனுமா விஹாரி 93 ரன்களும் குவிந்திருந்தனர்.

419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், துவக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து பும்ரா பந்து வீச்சில் நடையை கட்டினர்.

இதனையடுத்து இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் துவங்கியது. அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ரன்னும், ஹெட்மயர் 1 ரன்னும், டேரன் பிராவோ 2 ரன்னும், ஷாய் ஹோப் 2 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னும் எடுத்து மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கெமர் ரோச் மட்டும் அந்த அணிக்கு ஆறுதலாக 38 ரன்களை குவித்திருந்தார். ஆட்டநேர இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் சார்பில் அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related posts: