தாய்லாந்து பகிரங்க போட்டியில் அனித்தா ஜெகதீஸ்வரன்!

Thursday, May 25th, 2017

தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் பழைய மாணவியும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கைச் சாதனைக்குச் சொந்தக்காரியுமான அனித்தா ஜெகதீஸ்வரனுடன் மேலும் இருவர் முதல் தடவையாக சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளனர். இவர்கள் மூவரும் வெளிநாடு செல்லவிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்

தாய்லாந்தில் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இம் மூவருடன் மேலும் ஐவர் பங்குபற்றவுள்ளனர்.

தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி இல்லாததன் காரணமாக அனித்தாவுக்கு சர்வதேச அனுபவம் ஒன்றைப் பெற்றக் கொடுக்கும் முகமாக அவரைத் தெரிவு செய்தோம். என்று மெய்வல்லுநர் தெரிவுக் குழுத் தலைவர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனிதா 3.45 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டினார்.

சம்மட்டி எறிதல் வீராங்கனைகளான அயேஷா மதுவன்தி, அஜித் கருணாதிலக ஆகியோரும் முதல் தடவையாக சர்வதேச போட்டிகளில் பங்குப்பற்றவுள்ளனர்.

இவர்களை விட காலிங்க குமாரகே (400 மீ), தனூக்க லியனபத்திரண (நீளம்­பாய்தல்), டி. எஸ். ரணசிங்க (ஈட்டி எறிதல்), விதூஷா லக்ஷானி (முப்பாய்ச்சல்), நிலானி ரத்நாயக்க (3,000 மீ. தடைதாண்டி ஓட்டம்) ஆகியோரும் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் அனித்தாவின் பயிற்றுநர் சின்னையா சுபாஷ்கரன் அணி பயிற்றுநராகவும் அயேஷாவின் பயிற்றுநர் மாதவ பண்டார செனரத் அணி முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: