திசர அதிரடி – ஷஹீட் அஃப்ரிடி தலைமையிலான உலக பதினொருவர் அணி தோல்வி!

Saturday, June 2nd, 2018

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஆட்டம் நேற்று(31) லார்ட்ஸில் நடைபெற்றது.கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு உள்ளான கிரிக்கெட் மைதானங்களைச் சீரமைக்க நிதி திரட்டுவதற்காக குறித்த இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த ஆட்டத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச அந்தஸ்து அளித்துள்ளது.உலக பதினொருவர் அணிக்கு ஷஹீட் அஃப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டார். அஃப்ரிடி விளையாடிய கடைசி சர்வதேச ஆட்டம் இதுவாகும்.

நாணயற் சுழற்சியில் வென்ற உலக பதினொருவர் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.தொடக்க வீரர் எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தார்.

28 பந்துகளில் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த கெய்ல், சோயிப் மாலிக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். லூயிஸ் 26 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் குவித்தார். சாமுவேல்ஸ் 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் ராம்தின் 25 பந்துகளில் 44 ஓட்டங்களும் குவித்து கடைசிக் கட்டத்தில் அணியின் ஓட்டங்களை வெகுவாக உயர்த்தினார்கள்.

ரஸ்ஸல் 10 பந்துகளில் 3 சிக்ஸர் உள்பட 21 ஓட்டங்கள் எடுத்தார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் குவித்தது.

இந்தக் கடினமான இலக்கை எதிர்கொண்ட உலக பதினொருவர் அணி, 8 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். பெரேரா 37 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார். கடைசியில் 16.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது உலக பதினொருவர் அணி.

மேற்கிந்திய அணியின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும் பத்ரீ, ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். எவின் லூயிஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts: