தரவரிசை முதல் இடத்தை பிடித்தார் வோர்னர்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தர வரிசையில் டி வில்லியர்ஸ், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர்.
அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அவுஸ்திரேலியா 4-1 எனத் தொடரை கைப்பற்றியது. அவுஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் வோர்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் போட்டியில் 7 ஒட்டமும், 2-வது போட்டியில் 16 ஓட்டமும், 3-வது போட்டியில் 35 ஒட்டங்களும் குவித்த அவர், 4-வது போட்டியில் 130 ஒட்டங்களும், 5-வது போட்டியிலும் 179 ஒட்டங்களும் குவித்தார். அடுத்தடுத்து இரண்டு சதங்களுடன் ஐந்து போட்டிகளில் 367 ஒட்டங்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதனால் ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முதன்முறையாக முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 880 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்து வந்த டி வில்லியர்ஸ் 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கும், 2-வது இடத்தில் இருந்து விராட் கோலி 852 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
தென்ஆபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் டி காக் 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் 6-வது இடத்திலும், தென்ஆபிரிக்கா அணியின் ஹசிம் அம்லா 7-வது இடத்திலும், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 8-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் மார்ட்டின் குப்தில் 9-வது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் 10-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் ரோகித் சர்மா 12-வது இடத்திலும், டோனி 13-வது இடத்திலும், தவான் 15-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் இந்தியர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. அக்சார் பட்டேல் 12-வது இடத்திலும், அமித் மிஸ்ரா 14-வது இடத்திலும் உள்ளனர். அஸ்வின் 19-வது இடத்தில் உள்ளார்.
Related posts:
|
|