ராயுடு அபார சதம்: ஹைதராபாத் வென்றது சென்னை!

Monday, May 14th, 2018

ஹைதராபாத அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 46-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.

புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.அதன் படி ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் களம் இறங்கினர். ஹேல்ஸ் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 16 ஓவரில் 141 ஓட்டமாக இருக்கும்போது தவான் 49 பந்தில் 79 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

17-வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் குவித்தது.அடுத்து வந்த மணிஷ் பாண்டே 5 ஓட்டங்களில் வெளியேறியதால், ஹைதராபாத்18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பிராவோ வீசிய கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் எடுக்க ஹைதராபாத் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் சாகுல் தாகுர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக வாட்சன், ராயுடு களமிறங்கினர்.

இருவருமே ஆரம்பத்தில் இருந்து அதிரடி காட்ட சென்னை அணியின் ரன் விகிதம் அசுர வேகத்தில் எகிறியது. இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பந்து வீச்சு அணியாக கருதப்படும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை இவர்கள் இருவரும் அசால்ட்டாக சமாளித்ததால், இந்த ஜோடி 100 ஓட்டங்களை கடந்தது.

அதன் பின்னும் இருவரும் ஹைதரபாத் அணியினரி பந்து வீச்சை நாலா புறமும் பறக்கவிட சென்னை அணி 13.3 ஓவரில் 134 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வாட்சன் 57 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின் வந்த ரெய்னா 2 ஓட்டங்களில் வெளியேற, டோனியுடன் ஜோடி சேர்ந்தார் ராயுடு. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 62 பந்தில் சதம் அடிக்க இறுதியாக சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Related posts: