தரங்க அதிரடி: தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி !

Monday, May 7th, 2018

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (05) நடைபெற்றன.

இதில் கண்டி அணியை வீழ்த்திய கொழும்பு அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி அணி முதல் வெற்றியை பெற்றது.

தம்புள்ளை எதிர் காலி

அணித் தலைவர் உபுல் தரங்க பெற்ற முக்கியமான 86 ஓட்டங்களின் உதவியுடன் தம்புள்ளை அணிக்கு எதிரான போட்டியில் காலி அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வத் லூவிஸ் முறையில் வெற்றி பெற்றது.

இதனால் தம்புள்ளை அணி சார்பாக அஷான் பிரியன்ஜன் பெற்ற அபார சதம் வீணானது.கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மிலிந்த சிறிவர்தன தலைமையிலான தம்புள்ளை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது.

தம்புள்ளை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதும் பிரியன்ஜன் பெற்ற சதத்தில் மூலம் அந்த அணியால் சவாலான இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.

28 வயதான பிரியன்ஜன், 120 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் தம்புள்ளை அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.காலி அணி சார்பாக பந்துவீச்சில் தசுன் ஷானக்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த உபுல் தரங்க 79 பந்துகளில் வேகமாக 86 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்தார்.

காலி அணியின் மத்திய வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் அந்த அணியால் வெற்றி இலக்கை நோக்கி முன்னேற முடிந்தது.

இந்நிலையில் 46 ஓவர்கள் முடிவில் காலி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்டது.

அப்போது டக்வத் லூவிஸ் முறைப்படி காலி அணி வெற்றி பெற 240 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் அந்த அணி 250 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் நெருக்கடி இன்றி வெற்றியை உறுதி செய்ய முடிந்தது.

இதன் மூலம் காலி அணி தொடரில் முதல் வெற்றியை பெற்றதோடு அந்த அணி தனது முதல் போட்டியில் கண்டி அணியிடம் தோல்வியை சந்தித்தது.

மறுபுறம் தம்புள்ளை அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Related posts: