டிவில்லியர்ஸ் உதவியுடன்  இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு!

Wednesday, May 25th, 2016

ஐ.பி.எல்.தொடரின் முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் குவாலிபையர் சுற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் லயன்ஸ் அணியுடன் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 9 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. பிஞ்ச் (4), மெக்கல்லம்(1), ரெய்னா (1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

5வது நபராக களமிறங்கிய வெயின் ஸ்மித் அதிரடியாக விளையாடி 41 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ஓட்டங்கள் குவித்தார். ஸ்மித் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணி 158 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூர் அணியின் வாட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் விராட் கோஹ்லி தான் சந்தித்த 2வது பந்தில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

விராட் கோஹ்லியை வீழ்த்திய தவால் குல்கர்னி பந்தில் அனல் பறந்தது. விராட் கோஹ்லியைத் தொடர்ந்து கெய்ல் (9), ராகுல் (0), சச்சின் பேபி (0), ஆகியோரையும் வெளியேற்றினார்.

மற்றொரு முனையில் வாட்சன் 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூர் அணி 29 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது.

ஆனால், டிவில்லியர்ஸ் மட்டும் நிதான ஆட்டத்தை ஒருமுனையில் நின்று வெளிப்படுத்தி ரசிகர்களின் நம்பிக்கையை தக்க வைத்தார். 6வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் உடன் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தார்.

ஜகாதி வீசிய 9வது ஓவரில் பின்னி 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 18 ஓட்டங்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் பின்னி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 21 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்து இக்பால் அப்துல்லா டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அப்துல்லா அதிரடியாக விளையாடவில்லை என்றாலும், பந்துக்கு பந்து ஒரு ஓட்டம் என எடுத்து டி வில்லியர்ஸ்க்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

டி வில்லியர்ஸ் அடிக்கக்கூடிய பந்தை மட்டும் தெரிவு செய்து பவுண்டரி, சிக்சருக்கு விளாசினார். சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் 33 பந்தில் அரை சதம் கடந்தார். ஸ்மித் வீசிய 15வது ஓவரில் டி வில்லியர்ஸ் 11 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ், அப்துல்லா தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். அதன்பின் பெங்களூர் பக்கம் ஆட்டம் திரும்பியது. பிராவோ வீசிய 18வது ஓவரில் இக்பால் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

19வது ஓவரின் 2வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் பெங்களூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டி வில்லியர்ஸ் 46 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 78 ஓட்டங்கள் எடுத்தும், அப்துல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ஓட்டங்கள் எடுத்தும் இறுதிவரை வெளியேறாமல் வெற்றிக்கு உதவினர். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Related posts: