கோஹ்லி இரட்டை சதம்: தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் இங்கிலாந்து!

Monday, December 12th, 2016

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் விராட் கோஹ்லி (147), ஜயந்த் யாதவ் (30) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோஹ்லியும், ஜயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

சிறப்பாக ஆடிய விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அதே போல் மறுமுனையில் அசத்திய ஜயந்த் யாதவ் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 631 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் விராட் கோஹ்லி 235 ஓட்டங்களும், ஜயந்த் யாதவ் 104 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனையடுத்து 231 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்திய பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஜென்னிங்ஸ் முதல் பந்திலேயே டக்- அவுட் ஆனார். அணித்தலைவர் குக் (18) நிலைக்கவில்லை. அடுத்து வந்த மொயீன் அலியும் டக்-அவுட்டாக வெளியேறினார்.

நிதானமாக விளையாடி வந்த ஜோ ரூட் (77) அரைசதம் கடந்து வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் (18), ஜேக் பால் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த பேர்ஸ்டவ் அரைசதம் அடித்தார்.

இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் எடுத்து 49 ஓட்டங்கள் பின் தங்கி உள்ளது.

இந்தியா சார்பில், அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர் விக்கெட் இழப்பால் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. நாளை ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

22-1469205551-virat

Related posts: