கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Monday, April 30th, 2018

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

கோஹ்லி தலைமையிலான பெங்களூ அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக குயின்டான் டி காக், பிராண்டன் மெக்கல்லம் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் சேர்த்தது.

டி காக் 29 ஓட்டங்களிலும், மெக்கல்லம் 38 ஓட்டங்களிலும், மனன் வோரா ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் அணியின் தலைவரான கோஹ்லி நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு மந்தீப் சிங் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து ஆடியதால், இந்த ஜோடி 65 ஓட்டங்கள் குவித்தது.

மந்தீப் 19 ஓட்டங்களில் வெளியேற, கடைசி கட்டத்தில் கோஹ்லி அதிரடி காட்ட என பெங்களூரு அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணி சார்பில் கோஹ்லி 68 ஓட்டங்களும், கிராண்ட்ஹோம் 11 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரூ ரஸ்ஸெல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.

கொல்கத்தா அணி 6.3 ஓவரில் 55 ஓட்டங்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அணியின் எண்ணிக்கை 59 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 27 ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய உத்தப்பா 21 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்தது.

நிதிஷ் ரானா 15 ஓட்டம் எடுத்தபோது காயத்தால் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ஆண்ட்ரூ ரஸ்ஸெல் டக் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 23 ஓட்டங்களிலும் அவுட்டானார்.

இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிறிஸ் லின் 62 மற்றும் ஷுப்மன் கில் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் அஷ்வின், மொகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Related posts: