குசல் – சந்திமால் நியூசிலாந்து செல்வதற்கு கிரிக்கெட் நிறுவனம் அனுமதி!

Wednesday, November 28th, 2018

உடற் தகமை பரிசோதனைக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் (டெஸ்ட்/ஒருநாள்) தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பூரண சுகம் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தம்புள்ளையில் இடம்பெற்ற நிலையில், அதன் இரண்டாவது போட்டியில் குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு உள்ளாகியிருந்ததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியிருந்தார்.

இவ்வாறே இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் இடையே தொடைப் பகுதியில் இடம்பெற்ற உபாதை காரணமாக தினேஷ் சந்திமாலுக்கு எஞ்சிய டெஸ்ட் போட்டிகள் தவறியமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பந்து வீச்சில் சந்தேகம் நிலவுவது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் இல் ஐசிசி சோதனைகளுக்கு முகங் கொடுத்துள்ள அகில தனஞ்சயவின் பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கவுள்ளதாகவும், அது டிசம்பர் 07ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது வரையில் அகில தனஞ்சய குறித்து எதுவும் உறுதியாக கூற முடியாது என குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப் பயணத்திற்காக எதிர்வரும் 04ம் திகதி புறப்படவுள்ளதோடு, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது 15ம் திகதி இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: