உச்ச நீதிமன்றில் பி.சி.சி.ஐ-க்கு பலத்த அடி!
Friday, September 30th, 2016
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட லோதா செயற்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றாமை குறித்து, அச்சபைக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லோதா செயற்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும், அவற்றில் சிலவற்றைப் பின்பற்றுவதற்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தயங்கி வந்தது. அந்தப் பரிந்துரைகளுக்கெதிராக, அச்சபையுடன் நெருக்கமான முன்னாள் வீரர்கள் சிலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற லோதா செயற்குழு, இப்பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு, அச்சபையை மீறி, அமுல்செய்வதற்கான குழுவொன்று உருவாக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் டி.எஸ். தாக்கூர், “சட்டம், தனக்குரியது அன்று என பி.சி.சி.ஐ நினைக்கிறது. எங்களுடைய பணிப்புரைகளை எவ்வாறு அமுல்படுத்துவது என்று எமக்குத் தெரியும். தாங்கள் தான் கடவுள் என பி.சி.சி.ஐ நினைக்கிறது. எங்களுடைய பணிப்புரைக்கேற்ற செயற்படுங்கள், இல்லாவிடில் அதன்படி உங்களைச் செயற்பட வைப்போம். பி.சி.சி.ஐ-இன் செயற்பாடுகள், மோசமானவையாகக் காணப்படுகின்றன” என்றார்.
இது தொடர்பில் பதிலளிப்பதற்கு, பி.சி.சி.ஐ-க்கு ஒரு வாரம் காலஅவகாசம் வழங்குவதாக, அச்சபையின் சட்டத்தரணியிடம், பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கருத்து வெளியிட்டுள்ள லோதா செயற்குழுவின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான ஆர்.எம்.லோதா, பி.சி.சி.ஐ-இன் தலைவர் அநுரக் தாகூர், நீதிமன்ற உத்தரவை மதிக்காத விதத்தில், கேள்விப்படுத்தப்படக்கூடிய கருத்துகளை மேற்கொண்டுவருவதாகக் குற்றஞ்சாட்டினார். அத்தோடு, பல மின்னஞ்சல்கள் அனுப்பட்டதோடு, ஓகஸ்ட் 9ஆம் திகதி, செயற்குழுவில் ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டும், அவரிடமிருந்து பதிலேதும் வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Related posts:
|
|
|


