இலங்கை தொடரில் தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்!

Friday, November 10th, 2017

இலங்கை தொடரில் தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகியோரைத் தேர்வு செய்யலாம் என ஆஷிஷ் நெஹ்ரா யோசனை கூறியுள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்து டி20 தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது டி20 ஆட்டத்தில் தோனி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார். அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஷிஷ் நெஹ்ரா இந்த விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது: இலங்கைக்கு எதிரான தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக உள்ளவர்களுக்கு வாய்ப்பு தரலாம். தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகியோரைத் தேர்வு செய்யலாம். ஆனால், அந்தத் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக்கொள்வதா அல்லது அணியில் இடம்பெறுவதா என்பது குறித்து தோனி முடிவெடுக்க தேர்வுக்குழுவினர் அனுமதிக்க வேண்டும். விக்கெட் கீப்பிங் திறமைகளுக்காக மட்டுமல்லாமல் கூர்மையான கிரிக்கெட் அறிவுக்காகவும் தோனி அணியில் இடம்பிடித்துள்ளார்.

என்னால் 39 வயது வரை வேகமாகப் பந்துவீச முடிகிறபோது தோனியால் 2020 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடமுடியும். என்ன செய்யவேண்டும் என்பதை யாரும் தோனிக்குச் சொல்லவேண்டியதில்லை. அவரால் தானாக முடிவெடுக்க முடியும். ஒரு பயிற்சியாளரின் பணியையும் அவர் பகிர்ந்து கொள்கிறார். இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஊக்கமும் அளிக்கிறார் என்று கூறியுள்ளார்.

Related posts: