இன்று களமிறங்கும் ஆமிர்!  

Thursday, July 14th, 2016

இங்கிலாந்துக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, 2010ஆம் ஆண்டில் மாபெரும் நெருக்கடியைச் சந்தித்திருந்தது. அவ்வணியின் தலைவர் சல்மான் பட், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப், வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் ஆகியோர், ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமை, வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் அச்சம்பவம் இடம்பெற்று 6 ஆண்டுகளின் பின்னர், அந்த மூவரில் இளையவரான ஆமிர் மாத்திரம், அதே மைதானத்துக்குத் திரும்புகிறார். முன்பை விட முதிர்ச்சியடைந்தவராக, வாழ்க்கையின் அடிமட்டத்துக்குச் சென்று மீண்டவராக, அவரது மீள்வருகை அமைகிறது.

5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, அந்தத் தடை முடிவில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிளிலும் பங்குபற்றியிருந்தாலும், அவரது டெஸ்ட் மீள்வருகையான இப்போட்டி, அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதுவும், அதே மைதானமென்பது, இன்னமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இங்கிலாந்து வீரர்களும் ஊடகங்களும் இரசிகர்களும், ஆசியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரியவர்களைச் சாதாரணமாக விட்டதில்லை. இலங்கையின் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாகச் செய்திகள் வெளியானவுடனேயே, முரளி விளையாடும் போதெல்லாம் அவருக்கு அழுத்தங்களை வழங்கிய வரலாறு இருக்கிறது. இப்போது ஆமிர், குற்றம் செய்தமை நிரூபிக்கப்பட்டு, தடையின் பின்னர் திரும்புகிறார் என்பது, இங்கிலாந்தைச் சேர்ந்தோருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.

அதற்கேற்றாப்போல், “இங்கிலாந்து இரசிகர்களிடமிருந்து எதிர்வினையை ஆமிர் எதிர்பார்க்க முடியும்” என, இங்கிலாந்துத் தலைவர் அலஸ்டெயர் குக், ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். இவ்வாறான அழுத்தங்களை ஆமிர், எவ்வாறு எதிர்கொள்வார் என்பதிலேயே, இந்தத் தொடரின் முடிவு தங்கியிருக்கிறது என்று சொன்னால் கூட மிகையில்லை.

இலங்கை நேரப்படி இன்று(14) மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியோடு தொடங்கும் தொடரில், இங்கிலாந்து அணிக்கே அதிக வெற்றிவாய்ப்புகள் காணப்படுகின்றன என்பது தெளிவானது. ஆனால், முன்பெல்லா நேரங்களையும் விட, பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன என்பதையும், அனைவரும் ஏற்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானுக்கான அவ்வாறான வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் இருவரில் ஒருவராக, ஆமிர் காணப்படுகிறார். மற்றையவர், சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா.

இங்கிலாந்து அணியின் பிரதம வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன், உபாதை காரணமாக முதலாவது போட்டிக்கான குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத நிலையில், வழக்கமானளவு பலத்தை, அவ்வணி கொண்டிருக்கவில்லை. ஆனால் ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் பின் இருவரும், சிறப்பான போர்மில் இருக்கையில், எதிர்கொள்ள இலகுவானவர்கள் அல்லர் என்பது, இப்போட்டிக்கு மேலும் சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் வழங்குகிறது.

Related posts: