இனிங்ஸ் வெற்றியை இரண்டே நாளில் சுவைத்த தென்னாபிரிக்கா

Thursday, December 28th, 2017

சிம்பாப்வே-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையான ஒற்றை நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஐ.சி.சி நான்கு நாடகள் கொண்டதாக ஒழுங்கு செய்திருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, எய்டன் மர்க்ரமின் சதத்தின் உதவியுடன் 9 விக்கட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பெற்றுக்கொண்ட மர்க்ரம் 125 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில் அணித்தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் 53 ஓட்டங்களையும், புவுமா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்கள்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணியின் ஜெர்விஸ் மற்றும் ம்போபு தலா 3 விக்கட்டுகளை வீழ்த்த, அணித்தலைவர் கிரீமர் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே அணி வெறும் 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிம்பாப்வே அணி சார்பில் ஜெர்விஸ் அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் மிரட்டிய மோர்னே மோர்கல் 5 விக்கட்டுகளை வீழ்த்த, ரபாடா மற்றும் பெஹலுக்வோயோ தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 241 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தில் அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தாலும், மத்திய, பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி சார்பில் சிறப்பாக செயற்பட்ட மஹாராஜ் 5 விக்கட்டுகளையும், பெஹலுக்வோயோ 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை தென்னாபிரிக்க அணி சார்பில் முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் சதத்தை அடித்த (125) எய்டன் மர்க்ரம் பெற்றுக்கொண்டார். இத்தொடரை அடுத்து தென்னாபிரிக்கா இந்தியாவை வருகின்ற 5ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

Related posts: