இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல் வெற்றி!

Monday, October 31st, 2016

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (29), இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், வட்போர்ட், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

லிவர்பூல், கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பாக, எம்ரே கான்,டெஜான் லொவ்ரென், ஜோயல் மட்டிப், ரொபேர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லிவர்பூலின் ஆட்டத்தில் நட்சத்திரமாகத் திகழ்ந்த பிலிப்பே கூத்தின்யோவின் மூலையுதைகள் இரண்டை, லொவ்ரென், மட்டிப் ஆகியோர் கோலாக்கியிருந்தனர். இது தவிர, முதலாவது கோலுக்கும் கூட்டின்யோ பங்களித்திருந்தார்.

மன்செஸ்டர் சிற்றி, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. சிற்றி சார்பாக, சேர்ஜியோ அக்ரோ, இன்காய் குன்டோன் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர். இப்போட்டிக்கு முந்தைய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்காத சிற்றி, இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

ஆர்சனல், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. ஆர்சனல் சார்பாக, அலெக்சிஸ் சந்தேஸ், காயத்திலிருந்து அணிக்கு மீளத் திரும்பிய ஒலிவர் ஜிரோட் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் சார்பாக, பெனால்டி மூலம் வின்சென்ட் ஜன்ஸெனும் லெய்செஸ்டர் சிற்றி சார்பாக அஹ்மெட் மூஸாவும் ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில், யுனைட்டெட்டால் 37 கோல்பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை கோல் காப்பாளரினால் தடுக்கப்பட்டோ அல்லது கோல் கம்பத்தில் பட்டோ திரும்பியிருந்தன. இப்போட்டியின் இரண்டாவது பாதியில், யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸ் மொரின்யோ ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 2-0 என்ற கோல் கணக்கில், போர்ண்மெத்தை மிடில்ஸ்பேர்க் வென்றதுடன், 1-0 என்ற கோல் கணக்கில் ஹள் சிற்றியை வட்போர்ட் வென்றது.

இப்போட்டிகளின் முடிவில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், லிவர்பூல் ஆகியன 23 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோல் எண்ணிக்கை அடிப்படையில், மன்செஸ்டர் சிற்றி முதலாமிடத்திலும் ஆர்சனல் இரண்டாமிடத்திலும் லிவர்பூல் மூன்றாமிடத்திலும் உள்ளன.

article_1477840013-La-Liga-(2)

Related posts: