டி விலியர்ஸ் அதிரடி.. ஆப்கானிஸ்தானுக்கு இலக்கு 210

Sunday, March 20th, 2016

டி20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 209 ஓட்டங்களை குவித்தது

டி20 உலக கிண்ணம் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா துடுப்பெடுத்தாட தொடங்கியது.  ஆரம்ப வீரர்களாக டி கொக் மற்றும் ஹசிம் அம்லா களமிறங்கினர்.

கடந்த ஆட்டத்தில் அரை சதமடித்த அம்லா இந்த ஆட்டத்தில் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் டூ பிளசிஸ் களமிறங்கினார். இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஒரு கைப்பார்த்தனர்.

இந்நிலையில் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் பந்துகளை நாலா பக்கமும் விரட்டினார். இதற்கிடையில் டி கொக் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் டி வில்லியர்சுடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர்.

24 பந்துகளில் அரை சதமடித்த டி விலியர்ஸ் தொடர்ந்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் எடுத்த நிலையில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார்.

பின்னர் மில்லர் களமிறங்கினார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது.

டுமினி 29 ஓட்டங்களுடனும் டேவிட் விசெ ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது

Related posts: