இங்கிலாந்து அணி வெற்றி!

Tuesday, July 26th, 2016

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வந்தது.

கடந்த 22-ஆம் திகதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து நாணயச்சுழற்சியை வென்று துடுப்பெடுத்தாடியது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254 ரன்களும், அலைஸ்டர் குக் 105 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டும், ஆமிர் மற்றும் ரஹத் அலி தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 198 ரன்னில் சுருண்டது. மிஸ்பா அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணி 391 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. குக் 49 ரன்னுடனும், ரூட் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. குக் 76 ரன்னும், ரூட் 71 ரன்னும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து 564 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 565 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 234 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஹபீஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷபிக்(39), கேப்டர் மிஸ்பா(35) ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ், ஆண்டர்சன், அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி 330 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்ந்து 325 ரன்கள்(254, 71) எடுத்துள்ளார். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளதால் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற நிலையில் சமன் ஆகியுள்ளது.

Related posts: