ஆஸ்கர் விருது உனக்கு தான் – நெய்மரை வறுத்தெடுக்கும் சமூகவலைதளங்கள்!
Wednesday, July 4th, 2018
காயம் பட்டதாக கீழே விழுந்து அடிக்கடி நடிக்கும் நெய்மருக்கு ‘ஆஸ்கர்’ விருது தரலாம் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், 26. சமீபத்தில் வலது கணுக்கால் மற்றும் கால் விரல் காயத்தில் இருந்து மீண்டார். உலக கோப்பை தொடரில் கோஸ்டாரிகாவுக்கு எதிரான போட்டியின் போது மட்டும் இவரை 10 முறை ‘பவுல்’ செய்தனர். ஒருமுறை எதிரணி வீரர் கையை வைத்து தள்ளியதாக கீழே விழுந்தார். உடனடியாக நடுவர் பிரேசில் அணிக்கு ‘பெனால்டி’ தந்தார். ஆனால் ‘வார்’ குழு ‘ரீப்ளே’ செய்து பார்த்ததில் நெய்மர், தானாக விழுந்து நடித்தது தெரிந்தது. அடுத்து செர்பிய அணிக்கு எதிரான போட்டியில் இவரை ‘பவுல்’ செய்த போது காலை பிடித்துக் கொண்டு மைதானத்தில் படுத்து பலமுறை உருண்டார்.
‘ரவுண்டு–16’ போட்டியில் மெக்சிகோ வீரர் மிக்குயல் கணுக்காலில் இடித்த போது கீழே விழுந்து உட்கார்ந்தார் நெய்மர். அப்போது இவரது கால்களுக்கு இடையே இருந்த பந்தை எதிரணி வீரர் எடுத்தார். திடீரென வலது கணுக்காலை பிடித்து உருளத் துவங்கினார். மருத்துவ குழு வந்து சிகிச்சை செய்த பிறகு தான் மீண்டும் விளையாடினார். இதனால் நெய்மரை ரசிகர்கள் இணையதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். பலர், இவர் அதிகமாக நடிக்கிறார் என்றும், இதற்கு ஆஸ்கர் விருது தர வேண்டும் என பேசி வருகின்றனர்.
இதுகுறித்து மெக்சிகோ அணி பயிற்சியாளர் மிக்குயுல் லாயுன் கூறுகையில்,‘‘ கால்பந்து போட்டிகளில் இப்படிச் செய்வது நல்ல முன்னுதாரணம் அல்ல. இவரால் எங்களுக்கு அதிகமான நேரம் வீணானது. இது கால்பந்துக்கு கிடைத்த அவமானம். ஏராளமான சிறுவர்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது இப்படி நடிக்கக் கூடாது. இதனால் எங்களது வேகம் மற்றும் விளையாடும் ‘ஸ்டைல்’ பாதிக்கப்பட்டது,’’ என்றார்.
Related posts:
|
|
|


