ஆப்கானிஸ்தானை வென்றது வங்களாதேஷ்!

Tuesday, June 25th, 2019

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 31 வது போட்டியில் வங்கதேச அணி, 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்பதின் நைப் பந்து வீச்சை தெரிவு செய்தார்.

அதன்படி வங்கதேச அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தாஸ் 16 ஓட்டங்களிலும், தமிம் இக்பால் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஷாகிப் அல் ஹசன் 51 ஓட்டங்களும், ரஹிம் 83 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 35 ஓட்டங்களும், மெஹ்முதுல்லா 38 பந்தில் 27 ஓட்டங்களும் எடுக்க வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் குல்பதின் நைப் 47 ஓட்டங்களும் ரஹ்மத் ஷா 24 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தினை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷின்வாரி 49 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 47 வது ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் வங்காளதேசம் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: