ஆடுகளங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார!

Tuesday, June 18th, 2019

இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்கள் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அர்ஜூன ரணதுங்க, குமார் சங்கக்கார போன்றவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள ஆடுகளங்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பில் தற்போதைய கிரிக்கெட் சபை எவ்வித எதிர்ப்பையும் வெளியிடாது அமைதி காத்து வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டுவது, தோல்வியடைவது வழமையானது. எனினும், இலங்கை கிரிக்கெட் அணி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

அணியின் முகாமையாளர் அசாந்த டி மெல் கூறுவது போன்று இலங்கைக்கு ஆடுகளங்களை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய கிரிக்கெட் சபைக்கு அந்தளவு அறிவு உண்டா என்பது தெரியவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சரேனும் இது குறித்து முறைப்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகக் கிண்ண போட்டி போன்ற முக்கியமான போட்டிகளில் ஆடுகளங்களில் ஓர் சீரான தன்மை காணப்பட வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், நாடுகளுக்கு நாடு மைதானத்திற்கு மைதானம் ஆடுகளத்தின் தன்மை பாரிய மாற்றங்களுடன் காணப்படுகிறது. இதனால் அணிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் மைதான பராமரிப்பு கட்டமைப்பு இங்கிலாந்தில் கிடையாது. தங்குவதற்கான ஹோட்டல் வசதிகள், வலை பயிற்சிக்கான ஆடுகளங்கள், போக்குவரத்துக்கான பேருந்து, போட்டிகளுக்கான ஆடுகளங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு பாரபட்சம் காட்டியுள்ளதாக அணியின் முகாமையாளர் அசாந்த டி மெல் பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: