30 இலட்சம் ஒளியாண்டு தூரத்தில் அதிவேக ”நட்சத்திர மண்டலம்”!

Sunday, October 1st, 2017

இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் ஆஸ்ட்ரோசாட் (Astrosat), 30 இலட்சம் ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள்ளது.

நமது பால்வழி மண்டலத்தைப் போல பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்த இந்த மண்டலம், அதனைப் போல 12 மடங்கு வேகத்தில் நட்சத்திரங்களை உற்பத்தி செய்து அதிசயிக்கவைக்கிறது. பல அலை நீளம் கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2015 ஆம் ஆண்டு செலுத்தியது.

இச்செயற்கைக்கோள் அனுப்பிய நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ தற்போது தான் வெளியிட்டுள்ளது. முப்பது இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள, செட்டஸ் என்னும் நட்சத்திரக்கூட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறியரக நட்சத்திர மண்டலம் உல்ஃப்-லண்ட்மார்க்-மெல்லாட் என அழைக்கப்படுகிறது.

அருகாமையில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் இருந்து விலகியுள்ள இந்த உல்ஃப் மண்டலம் சூரிய குடும்பத்தில் உள்ளதைப் போல 13 சதவிகிதம் மட்டுமே உலோகத்தைக் கொண்டுள்ளது.

வழக்கமாக நட்சத்திரக் கூட்டங்களின் நிறை குறைவாக இருக்கும்போது, அது புதிய நட்சத்திரங்கள் உருவாகும் விகிதத்தைப் பாதிக்கும். ஆனால், மிகவும் நிறை குறைவாக உள்ள இந்த நட்சத்திர மண்டலம் எப்படி அதிவேகத்தில் நட்சத்திரங்களை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆஸ்ட்ரோசாட்டின் UVஐக் கண்டறியும் கருவிகள் தொலைவிலுள்ள போட்டான்களைக் கண்டறிந்த அதேவேளையில், செயற்கைக்கோளில் உள்ள இமேஜர் இதைப் படமாக்கியுள்ளது.இரண்டு விதமான தொலைநோக்கிகள், புகைப்படம் எடுக்கும் கருவி உட்பட ஐந்து விதமான கருவிகளுடன் ஆஸ்ட்ரோசாட் விண்ணிற்கு அனுப்பப்பட்டது

Related posts: