13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கருந்துளை !

Monday, December 11th, 2017

வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெருவெடிப்பிற்கு 690 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பார்க்கும் இந்த கருந்துளை, வியத்தகு 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஆனால், சூரியனின் எடையை விட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இந்த கருந்துளை, பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை மிகச்சிறிய நாட்களில் எட்டியுள்ளது வியப்பிற்குரியதாகும்.

நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகை இது தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருந்துளை ஒரு நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருந்துகொண்டு அண்டும் பொருட்களை இழுத்துக்கொண்டுள்ளது. எனவே இது குவாசர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த குவாசர் மிகவும் சுவாரஸ்யமானது. ஏனென்றால், பிரபஞ்சம் அதன் தற்போதைய வயதில் 5% இருக்கும் சமயத்தில் இருந்து இது வந்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான், முதல் நட்சத்திரம் தோன்றியதற்கு முன்பு, பிரபஞ்சம் இருண்ட காலத்திலிருந்து வெளிவரத்தொடங்கியது.

குவாசரின் தொலைவானது ரெட்ஷிப்ட் என்னும் ஒரு அளவுகோல் மூலம் அளவிடப்படுகிறது. பேரண்டம் விரிவடைவதன் காரணமாக குவாசரின் ஒளியின் அலை நீளம் புவியை அடைவதற்கு முன்பு எந்த அளவு இழுபட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட் ஷிப்ட் மதிப்பிடப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளை 7.54 ரெட்ஷிப்ட் அளவைக் கொண்டுள்ளது.

எந்த அளவிற்கு ரெட்ஷிப்ட் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும்.

இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு, அதிகத் தொலைவுள்ள குவாசராக அறியப்பட்டது, பிரபஞ்சம் தோன்றி 800 மில்லியன் ஆண்டுகள் ஆன பொழுது தோன்றியது.

விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டபோதும் இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு பொருளை காண்பதற்கு ஐந்தாண்டு காலம் ஆகியிருக்கிறது.

Related posts: