கோழிகளின் வாசனையை நுளம்புகள் விரும்புவதில்லை – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Friday, November 3rd, 2017

கோழிகளின் வாசனையை நுளம்புகள் விரும்புவதில்லை என எதியோப்பியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் மலேரியா நோயின் பரவலைத் தடுப்பதற்கு நவீன வழிமுறை ஒன்றை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மனிதர்களையும் ஏனைய மிருகங்களையும் நுளம்புகள் கடிக்கின்ற போதிலும் கோழிகளிலிருந்து நுளம்புகள் விலகியிருப்பதை சோமாலியாவின் தலைநகர் அடீஸ் அபாபாவிலுள்ள “அடீஸ் அபாபா” பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ‘ஹெப்தே தெக்கீ’ தலைமையிலான பூச்சியியல் நிபுணர்கள் குழாமொன்று அவதானித்துள்ளது. அதையடுத்து மலேரியா நுளம்புகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான புதிய வழிகள் குறித்து இக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். கோழிகள் தம்மைக் கொன்றுவிடும் என நுளம்புகள் கருதுவதும் அவை கோழிகளிலிருந்து விலகியிருப்பதற்கான ஒரு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எதியோப்பியாவின் வடபகுதியிலுள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி கோழியொன்றைக் கொண்டுள்ள கூட்டின் அருகில் உறங்குபவர்கள் நுளம்புத் தாக்கமின்றி உறங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வீட்டுக்குள் கோழி எதையும் வளர்க்காத வீடுகளில் இந்த நிலை காணப்படவில்லை என ஏ.எவ்.பி தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு விவரங்கள் மலேரியா ஜேர்னல் எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இம் முறையில் தயாரிக்கப்படும் நுளம்பு எதிர்ப்புப் பொருள் மனிதப் பாவனைக்கு பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் அது நீரையோ மண்ணையோ நஞ்சடையச் செய்யாது எனவும் பேராசிரியர் ஹெப்தே தெக்கீ தெரிவித்துள்ளார்.

உலகில் மலேரியாத் தொற்றினால் வருடாந்தம் லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். 10 கோடி மக்களைக் கொண்ட எதியோப்பியாவில் 60 சதவீதமானோர் மலேரியா அச்சுறுத்தலை எதிர் நோக்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: