தத்ரூபமாக வரையப்பட்ட தாய்லாந்து குகை மீட்புப் பணி!

Wednesday, July 25th, 2018

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க நடைபெற்ற பணிகளை அந்நாட்டு ஓவியக் கலைஞர்கள் தத்ரூபமாகச் சுவரில் வரைந்து அசத்தியுள்ளனர்.

ஒரு மாதமாக தாய்லாந்து என்ற பெயரை உச்சரிக்காதவர்களே கிடையாது என்ற அளவுக்கு உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களும் அவர்களை மீட்க நடைபெற்ற பணிகளும்தான். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட மிகவும் திறமை வாய்ந்த மீட்புப் படையினர் 18 நாள்கள் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகிய 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். பெரும் சிரமங்களுக்கு நடுவே இந்த மீட்புப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தங்கள் வீடுகளுக்கும் சென்றுவிட்டனர். மேலும், இவர்கள் மீட்கப்பட்ட பிறகு கடந்த 17-ம் தேதியன்று உலக பத்திரிகையாளர்களைச் சந்தித்து குகையில் நேர்ந்த தங்களின் அனுபவம் குறித்து விளக்கினர். தொடர்ந்து அந்நாட்டு மீட்புப் படை அலுவலகத்துக்கு நேரில் சென்று மீட்புப் படை வீரர்களுக்கு தங்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இவற்றைத் தொடர்ந்து தற்போது தாய்லாந்து, சியாங் ராய் கிராமத்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்ட வீரர்களைக் கவுரவிக்கும் வகையில் மிகப்பெரிய சுவரோவியம் வரையப்பட்டுள்ளது.  தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள  ‘ஆர்ட் பிரிட்ஜில்’ என்ற தனியார் கலை நிறுவனத்தின் கலைஞர்களால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில்  தற்போது பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தில், கால்பந்து அணியின் பெயரான காட்டுப் பன்றிகள், குகையில் சிக்கிய சிறுவர்கள், பயிற்சியாளர் மற்றும் மீட்புப் பணியின் போது நடைபெற்ற விவாதங்கள், இதில் முக்கிய பங்காற்றிய வீரர்கள், மீட்புப் பணியின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த ஓவியத்தில், மீட்புப் பணியின்போது உயிரிழந்த தாய்லாந்து கடற்படையின் முன்னாள் அதிகாரி சமான் குனானுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குகையில் சிறுவர்களுடன் மூன்று நாள்கள் தங்கியிருந்த மருத்துவர் ஹாரியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

காட்டுப் பன்றி மற்றும் அதன் சிறு குட்டிகள், கடற்படை அதிகாரி சமானின் காலடியில் தஞ்சமடைந்துள்ளதுபோல் ஒரு சிறிய சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2_10015

Related posts: