12  இலட்சம் நாணயங்கள்: 6 மாதம் வேலை!

Saturday, December 23rd, 2017

ஒரு மனிதனால் எவ்வளவு நாணயங்களைச் சேமித்துவிட முடியும்? ஜேர்மனியில் உள்ள ஒரு குடும்பத்திடம் 12 லட்சம் நாணயங்கள் இருந்தன. 2 ஆயிரத்து 250 கிலோ எடையுடைய இந்த நாணயங்களை வங்கியில் கொடுத்து பணமாகப் பெற்றுக் கொள்வதற்காக ஒப்படைத்துள்ளனர்.

கனரக வாகனச் செலுத்துனராக இருந்த குடும்பத்தின் தலைவர் 30 ஆண்டுகளாகத் தினமும் ஒன்றிரண்டு நாணயங்களைச் சேமித்து வந்திருக்கிறார். அவர் இறந்த பிறகு தான் இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்திருக்கிறது. மலை போல் குவிந்துள்ள இந்த நாணயங்களை எப்படி வங்கியில் ஒப்படைப்பது என்று நினைத்தனர். இவற்றில் பல நாணயங்கள் இப்போது புழக்கத்தில் இல்லை. விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜேர்மனிய மத்திய வங்கி பழைய நாணயங்களை வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டது. நாணயங்கள் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. சாதாரணமாக நாணயங்களை எண்ணுவதற்கு வங்கியில் கருவிகள் இருக்கின்றன. ஆனால் இந்த நாணயங்கள் துருப்பிடித்திருப்பதால் கருவிகளில் போடமுடியவில்லை.

அதனால் நாணயங்களைக் கைகளால் எண்ணுவதற்கு வங்கியில் பணிபுரியும் ஒருவரை நியமித்தது வங்கி. கடந்த 6 மாதங்களாக நாணயங்களை எண்ணுவது மட்டுமே அவரது வேலை.

நாணயங்களைத் தினமும் எண்ணி பைகளில் நிரப்பி எழுதி வைப்பது தான் என்னுடைய வேலை. நாணயங்களை எண்ணுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததால் இந்த வேலை சலிப்பைத் தரவில்லை. 6 மாதங்களில் வேலை முடிந்துவிட்டது. தனிப்பட்ட ஒருமனிதரிடம் இவ்வளவு நாணயங்கள் இருந்தமை ஆச்சரியமானது என்கின்றார் நாணயங்களை எண்ணுவதற்காக பணிக்கப்பட்ட ஊழியர்.

Related posts: