மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது  மகிழ்ச்சியே -ஆய்வின் முடிவில் விளக்கம்!

Saturday, March 18th, 2017

உலகப் புகழ்பெற்ற மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது சோகமல்ல, மகிழ்ச்சியே என ஆய்வொன்றின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஓவியர் லியனார்டோ டாவின்ஸி 1500 ஆவது ஆண்டுகளில் வரைந்த மோனலிசா ஓவியத்தில் இடம்பெற்றுள்ள லிசா கெரார்தினியின் இதழ்களில் தவழும், சோகமா, மகிழ்ச்சியா என்பதை இனங்காண முடியாத புன்முறுவல் தான் மோனலிசா உலகப் புகழ் பெற்றதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இந்தக் கருத்தைப் பொய்யாக்கும் வகையில், மோனலிசாவின் இதழ்களில் தவழ்வது மகிழ்ச்சியைக் குறிக்கும் புன்னகைதான் என்பதை ஆய்வு மூலம் விளக்கியுள்ளனர் ஜெர்மனியின் ஃப்ரீபெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

மோனலிசாவின் இதழ் வளைவுகளில் கணினியின் மூலம் சிறிய கோண மாறுபாடுகளைச் செய்து அவை துன்பத்தை வெளிப்படுத்துவது போலவும், இன்பத்தை வெளிப்படுத்துவது போலவும் பல படங்களை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள்.

அத்துடன், அசல் மோனலிசா ஓவியத்தையும் சேர்த்து, பொதுமக்களிடம் அதுகுறித்து கருத்து கேட்டனர்.அதில், சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த படங்களைப் பார்த்து, மோனலிசா அழுவதாகக் கூறிய மக்கள், சிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த படங்களைப் பார்த்ததும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகக் கூறினார்கள்.

அசல் மோனலிசாவின் படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் மோனலிசா சிரிப்பதாகக் கூறினார்கள்.இதன்மூலம், அவர் சோகத்தை வெளிப்படுத்துவதான மனப்பான்மையுடன் பார்ப்பதால்தான் மோனலிசா அழுவதைப் போல் தோன்றுகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மற்றபடி மோனலிசாவின் புன்னகை மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்பது நிரூபணமாகியுள்ளது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

Related posts: