நெல்சன் மண்டேலாவை பற்றி……!

Tuesday, August 2nd, 2016

கறுப்பர் இன சுதந்திரத்திற்காகவும் தென்னாப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும் ஆயுதம் மற்றும் அகிம்சை வழியில் போராட்ட வாழ்வை நடத்தியவர் மண்டேலா.

அதற்காக, 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தவர். உலக அமைதிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரைப் பற்றிய வரலாற்றை அறிந்திருப்போம். நாம் அறிந்திராத சில சுவாரஸ்யங்கள்.

நெல்சன் மண்டேலா, க்ஸோசா என்ற ஆப்பிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 ல் பிறந்தார். அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla). இந்த பெயருக்கு ’பல கிளைகளுடைய மரம்’ அல்லது ’பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பள்ளி ஆசிரியை, ’நெல்சன்’ என மாற்றி வைத்தார். ஆப்பிரிக்க மாணவனுக்கு ஆங்கில பெயர் வைக்க காரணம் அந்த ஆசிரியை ஆங்கிலேய பெண். 1920 களில் தென்னாப்பிரிக்காவில் காலனி ஆட்சி நடந்துவந்தது.

1992 ல் வெளியான ’ஸ்பைக் லீ’யின் ’மால்காம் எக்ஸ்’ என்ற வரலாற்றுப் படம் மண்டேலாவை கவுரவப்படுத்தி எடுக்கப்பட்டது. படத்தின் இறுதிக் காட்சியில், பள்ளி ஆசிரியராக தோன்றி, சோவெட்டாவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு உரையாற்றுவது போல, மண்டேலாவின் பிரபலமான பேச்சு ஒப்புவிக்கப்பட்டது. அமைதிவாதியான மண்டேலாவின் கொள்கைக்கு ஏற்ப லீ சில திருத்தங்களையும் அதில் செய்தார்.

1973 ம் ஆண்டில், லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையால் அணுக்கருவில் உள்ள துகள் ஒன்றுக்கு ‘மண்டேலா துகள்’ என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கேப் டவுனிலிருந்து கலிபோர்னியா வரை உள்ள ஒரு தெருவுக்கு மண்டேலா பெயரிடப்பட்டுள்ளது. அசாதாரணமான சில அஞ்சலி பொருள்களுக்கும் அவர் பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அபூர்வமான ஒரு மரங்கொத்தி பறவை இனத்துக்கும் ‘ஆஸ்ட்ரோலோபிகஸ் நெல்சன் மண்டேலா’ என சமீபத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

மண்டேலா தனது 80 வது பிறந்த தினத்தில் கிரேகா மச்சேலை திருமணம் செய்துகொண்டார். அதற்குமுன், க்ரேகா மச்சேல் மொஸாம்பிக் ஜனாதிபதி சமோரா மச்சேலை திருமணம் செய்திருந்தார். தன் கணவர் இறந்த பிறகே, மண்டேலாவோடு வாழ்ந்தார். இதனால், இரு நாட்டு அதிகாரத்திற்குரிய முதல் பெண் ஆனார்.

மண்டேலா ஒரு மாறுவேட மன்னர். நிறவெறிக்கு எதிராக போராடிய காலங்களில், அவர் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக ஓட்டுனர் உட்பட்ட பல மாறுவேடங்கள் போட்டு காவலர்கள் கண்களில் மண்ணை தூவினார். ’சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடை’ என்ற சுயசரிதையில், ’நான் ஒரு இரவு உயிரினம், பகலில் பதுங்கி இரவில் என் லட்சியப் பணிகளை தீவிரப்படுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

ரத்தம் தோய்ந்த சதி அரசியலுக்கு அப்பாற்பட்டு, குத்துச்சண்டையில் பேரார்வம் கொண்டவர். அதுபற்றி அவர் சுயசரிதையில் கூறும்போது, ‘நான் குத்துச்சண்டையில் உள்ள வன்முறையை வெறுக்கிறேன். அதே சமயம், அதில் உள்ள அறிவியல் பயனுள்ளது. நம்மை தாக்குபவரிடம் எப்படி தற்காத்துக்கொள்வது, அவசியம் ஏற்பட்டால் எப்படி தாக்குவது. சண்டையின்போது வேகக்கட்டுப்பாட்டை பெறுவது போன்ற முன்னெச்சரிக்கையை அதில் உள்ள அறிவியலாக கருதுகிறேன்’ என்கிறார்.

மண்டேலா உலகத் தலைவர்களுடன் உணவருந்தும் போது ’வைன்’ எடுத்துக்கொள்வார். அவருக்கு மிகவும் பிடித்த உணவு பண்ணை விலங்குகளின் குடல் பகுதி (போட்டி).

மண்டேலா தனது பகல் வேலையை விட்டுவிட்டு, ஜொகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ரண்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1952 ல் அந்த நகரில் முதல் கருப்பு சட்ட நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்.

மண்டேலாவின் பெயர் அமெரிக்காவின் திவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் 2008 ம் ஆண்டு வரை, அவருடைய 89 வயதிலும் இருந்தது. நிறவெறிக்கு எதிரான போர்குணம் இருந்ததால், மண்டேலா உட்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயர்களும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

அவர் ஒரு கவிதையால் ஊக்கம் பெற்றவர். சிறையில் இருந்தபோது, சக கைதிகளிடம் வில்லியம் ஏர்னஸ்ட் ஹென்லியின் ‘இன்விக்டுஸ்’ என்ற பாடலை வாசித்துள்ளார். அதில் இடம்பெற்ற ”நான் என் விதிக்கு மாஸ்டர், நான் என் ஆன்மாவுக்கு கேப்டன்” என்ற வரிகள் அவர் நெஞ்சைவிட்டு என்றுமே நீங்காதவை என்கிறார். இதுவும் மண்டேலாவாக ஃப்ரீமேன் மோர்கன் நடித்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒருவேளை, வெள்ளையர்களை கருப்பர்கள் அடிமைப்படுத்தினாலும் கருப்பர்களுக்கு எதிராக போராடுவேன் என்ற ஒரு சமதர்ம செம்மல் நெல்சன் மண்டேலா!

Related posts: