தொடர்கிறது அப்பிள்-எஃப்.பி.ஐ மோதல்

Sunday, March 6th, 2016

சான் பேர்ணான்டினோ துப்பாக்கிதாரிகளில், ஒருவரினால் பயன்படுத்தப்பட்ட ஐபோனிலிருக்கும் தகவல்களை ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பணியகத்துக்கு வழங்குமாறு அப்பிள் நிறுவனத்துக்கு வழங்கப்படக்கூடிய  இறுதி நீதிமன்ற தீர்ப்பானது, வேறு வழக்குகளில் மத்திய புலனாய்வு பணியகம், தொழில்நுட்ப நிறுவனங்களிடம் வினவும் இது மாதிரியான ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்கும் என மத்திய புலனாய்வு பணியகத்தின் பணிப்பாளர் ஜேம்ஸ் கொமே, ஐக்கிய அமெரிக்க கொங்கிரஸின் சபையொன்றுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (01) ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் மேற்கூறிய கருத்துக்களுக்கு எதிர்மாறான கருத்துகளை வெளிப்படுத்திய கொமே, அலைபேசியைத் திறக்குமாறு அப்பிளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமையானது, ஏனைய வழக்குகளுக்கு முன்மாதிரியாக அமையாது எனத் தெரிவித்திருந்தார். தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை காலமும் நீதிமன்றத்திலேயே மோதல் நிலவிவந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் நீதி செயற்பாட்டுச் சபையின் முன்னால் கொமேயும் அப்பிளின் பொது வழக்குரைஞர் புரூஸ் சீவெல்லும் பரிமாறிக் கொண்ட கருத்துக்களையடுத்து அப்பிளும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கமும் பொதுவெளியில் மோதியுள்ளன. கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி, கலிபோர்னியாவில் உள்ள மத்திய நீதிமன்றமொன்று, துப்பாக்கிதாரி ரிஸ்வான் பாரூக்கினால் பயன்படுத்தப்பட்ட ஐபோன் 5சியினை திறப்பதற்கு சிறப்பு மென்பொருளை எழுதுமாறு அப்பிளை பணித்ததையடுத்தே அனைத்து மோதல்களும் ஆரம்பித்திருந்தன.

பாரூக்கின் ஐபோனுக்கான உருவாக்கப்பட்ட மென்பொருள், ஏனையவற்றில் இயங்காது என கொமே தெரிவிக்கையில், அப்பிளுக்கு உருவாக்குமாறு கூறப்பட்ட மென்பொருள், அனைத்து ஐபோன்களிலும் இயங்கும் என சீவெல் தெரிவித்துள்ளார்.

Related posts: