ஒரு ஜோடி நாயை கோடி கொடுத்து வாங்கிய தொழிலதிபர்!

Monday, March 28th, 2016

பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில்அதிபரான இவர் நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ரூ.1 கோடிக்கு சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘கொரியன் தோசா மஸ்தீப்’ என்ற இனத்தை சேர்ந்த பிறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன ஒரு ஜோடி நாய்க்குட்டிகளை வாங்கினார்.

இந்த நாய்க்குட்டிகள் பீஜிங்கில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. விமான நிலையத்தில் வந்து இறங்கிய நாய்க்குட்டிகளை சதீஷ் ஆர்வமுடன் வரவேற்று கொஞ்சினார். அப்போது, ஒரு நாய்க்குட்டிக்கு உடல்நல குறைபாடு இருப்பது தெரியவந்தது.

பின்னர், அந்த நாய்களை தனது வீட்டுக்கு கொண்டு சென்ற சதீஷ் அருகே உள்ள கால்நடை டாக்டரிடம் நாய்க்குட்டிகளை காண்பித்தார். டாக்டர் நாய்க்குட்டிகளை பரிசோதனை செய்தார். அப்போது, ஒரு நாய்க்குட்டி மூக்கு ஒழுகலால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சீனாவில் இருந்து இந்தியா வந்த இந்த ஒரு ஜோடி நாய்க்குட்டி கொழுகொழுவென காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நாய்க்குட்டிகள் குளிர் பிரதேசங்களில் வளர கூடியது என்பதால் இதற்கென சிறப்பு வசிப்பிடத்தை ஏற்படுத்தி கொடுக்க சதீஷ் முடிவு செய்துள்ளார். தொழில்அதிபர் சதீஷ் 2 நாய்க்குட்டிகளை ரூ.1 கோடிக்கு வாங்கிய சம்பவம் கர்நாடக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts: