அணுக்களை அசைத்து உருவாக்கப்பட்ட நினைவாற்றல்!

Saturday, July 23rd, 2016

நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழகத்தின் நேனோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள், உலகின் மிகச் சிறிய, ஆனால் அதிக நினைவாற்றல் கொண்ட ‘ஹார்டு டிஸ்க்’ எனப்படும் வன் தட்டை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை உலகில் வெளியிடப்பட்ட அத்தனை புத்தகங்களில் உள்ள தகவல்களையும் பதிவு செய்துவிட முடியும் என்று இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் யுகத்தில் பல லட்சம் கோடி புள்ளி விபரங்கள் நாள்தோறும் உருவாக்கப்படுகின்றன.

இத்தனை தகவல்களையும் பதிந்து வைக்க மிகச் சிறிய இடத்தையே அடைத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்த சாதனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. அவ்வளவு ஏன், 1959லேயே, பிரசித்தி பெற்ற அமெரிக்க விஞ்ஞானியான, ரிச்சர்ட் பெயின்மேன், நேனோ தொழில்நுட்பத்தின்
சாத்தியங்களை விவரித்திருக்கிறார்.

இதனால், அவரது பிரபலமான அறிவியல் உரையின் ஒரு பகுதியை, 100 நேனோ மீட்டர் பரப்பளவுக்குள் விஞ்ஞானிகள் பதித்துக் காட்டிஉள்ளனர். கணினிகளின் மூளையான சிலிக்கன் சில்லில், 1 மற்றும், 0 ஆகிய இரு எண்களை மட்டுமே வைத்து எல்லா தகவல்களையும் பதிகின்றனர். ஆனால் நெதர்லாந்து விஞ்ஞானிகள், பலபடி மேலே சென்று, தனித் தனி அணுக்களை, 1 மற்றும், 0 போல உருவகித்து தகவல்களை பதிந்திருக்கின்றனர். சக்திவாய்ந்த நுண்ணோக்கி மற்றும் ஒரு நுண்ணிய ஊசி மூலம் தாமிரத்தின் அணு மற்றும் குளோரின் அணு ஆகிவற்றை தம் விருப்பப்படி நகர்த்தி தகவல்களை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த அணுக்கள், யாரும் சீண்டும் வரை அந்த இடத்தை விட்டு அசையாது என்பதால், இது ஒரு நம்பகமான பதிவு சாதனமாக இருக்கும்.ஒரு சதுர அங்குலத்திற்குள், 500 டெராபிட் அளவுக்கு அடர்த்தியாக தகவல்களை நெதர்லாந்து விஞ்ஞானிகளால் பதியவைக்க முடியும் என்பது பலரை மலைக்க வைத்திருக்கிறது.

தற்போது கிடைக்கும் அதிக நினைவாற்றல் கொண்ட வன் தட்டைவிட, 500 மடங்கு தகவல் அடர்த்தி இது. ‘நேச்சர் நேனோ டெக்னாலஜி’ இதழில் இந்த கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் வெளியானது.

Related posts: