DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள் – நாட்டை விட்டு வெளியேறும் தொழில் முயற்சியாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் கோரிக்கை!

Tuesday, November 14th, 2023

DIGIECON 2030 வேலைத் திட்டத்துடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுமாறு நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கேட்டுக்கொள்வதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

டிஜி இகொன் வேலைத் திட்டத்தின் கீழ், தொழில்முயற்சியாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கி டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகளாவிய தொழில் முயற்சியாளர் வாரத்தின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டபோதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

நவம்பர் 13 முதல் ஒரு வார காலம் “Entrepreneurs Thrive Here” என்ற தொனிப்பொருளின் கீழ் 200 இற்கும் மேற்பட்ட நாடுகள், உலகளாவிய தொழில் முயற்சியாளர் வாரத்தை கொண்டாடுகின்றன.

இந்த வாரம் முழுவதும், நாட்டின் பல்வேறு இடங்களில், துறைசார் நிறுவனங்கள், அமைப்புகள், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள தனிநபர்களின் பங்களிப்புடன் தொழில்முயற்சி, புத்தாக்கம், ஆரம்ப வர்த்தக பொருளாதாரக் கட்டமைப்பு, கல்வி, டிஜிட்டல் தொடர்பு மற்றும்   கொள்கைகள் ஆகிய பிரிவுகளின் கீழ் மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் கலந்துரையாடல்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார் நிபுணர்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு தொழில் துறைகளில் உள்ள புதிய தொழில் முயற்சியாளர்களை பாராட்டவும் வலுவூட்டவும் இதன் ஊடாக நடைபெறுகின்றது.

அதன்படி, உலகளாவிய தொழில் முயற்சியாளர் வாரத்தில், இலங்கையில் 60 இற்கும் மேற்பட்ட பங்காளிகள் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு செயல்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

Digi-Econ வேலைத் திட்டத்தின் கீழ் எமது தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். நமது நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து, மாவட்ட ரீதியில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர் இந்த திட்டத்தில் இணைந்து நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுப்படுத்த உங்கள் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: