90 ரூபாவுக்கு பெற்றோல் விற்கலாம் – பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில!

Tuesday, May 15th, 2018

எரிபொருளுக்கான வரிகளை அரசாங்கம் நீக்குமாக இருந்தால் இலங்கையில் பெற்றோலை 90 ரூபாவுக்கு விநியோகிக்க முடியுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

தற்போது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் கிளிகளைப் போன்று பேசுகின்றார்கள். நாங்கள் எரிபொருள் விலையை அதிகரித்தாலும் மகிந்த ராஜபக்ஷ காலத்தை விடவும் லாபம்தானே எனக் கூறுகின்றனர்.

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. கடந்த 11 ஆம் திகதி பெற்றோல் விலையை 137 ரூபா வரை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரலொன்று 67 டொலராக காணப்பட்டது.

இதற்கு முன்னர் பெற்றோல் விலை 137 ரூபாவுக்கு அதிகமாக 2011 ஆம் ஆண்டிலேயே விற்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரலொன்று 100 டொலராகவே காணப்பட்டது. இதன்படி மகிந்த காலத்தில் 150 ரூபா வரை பெற்றோல் விலை காணப்பட்டது என்பது உண்மை தான்.

இப்போது உலக சந்தையில் அப்போதிருந்த விலை இருக்குமென்றால் பெற்றோல் விலையை இந்த அரசாங்கம் 200 ரூபாவை விடவும் உயர்த்தியிருக்கும். எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டில் இந்த அரசாங்கம் 117 ரூபா வரை எரிபொருள் விலையை குறைத்த போது உலக சந்தையில் 61 டொலருக்கே மசகு எண்ணெய் இருந்தது. இப்போது அதன் விலை 67 டொலராக காணப்படுகின்றது. இப்படியிருக்கையில் எவ்வாறு 137 ரூபா வரை பெற்றோல் விலையை அரசாங்கம் அதிகரித்தது என்பதனை அரசாங்கத்திலுள்ள பொருளாதார மேதைகள் எங்களுக்குக் கூற வேண்டும்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 29 டொலராக வீழ்ச்சி கண்டது. ஆனால் அப்போது அதன் நன்மைகளை மக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கவில்லை. ரவி கருணாநாயக்க கூறுவதைப்போன்று இங்கு வரிகள் அதிகரிக்கப்பட்டமையினாலேயே எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடனத்தில் எரிபொருளுக்கு அரசாங்கம் 4,000 கோடி ரூபா வரியை அறவிடுவதாகவும் இதனை நீக்க நடவடிக்கையெடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது தீர்வை வரி, வெளிநாட்டு பண்ட வரி, துறைமுக வரியென 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் வரிகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த வரிகள் இல்லாவிட்டால் பெற்றோலை 90 ரூபாவுக்கு வழங்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்

Related posts: