8 முதன் முறையாக ஜனாதிபதியானார் ரணில் விக்ரமசிங்க!

Wednesday, July 20th, 2022

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.

அந்த வகையில் இதுவரை பல முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, முதன் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம், ஒரு வருடத்திற்கும் மேலான இழுபறியின் பின்னர், பாராளுமன்றம் நுழைந்த ரணில் விக்ரமசிங்க, அந்த ஒரேயொரு ஆசனம் மூலம் 9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதமராகவும், அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள அவரது ஆட்சிக் காலத்திற்காக, இன்றையதினம் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பின் அடிப்படையில், இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் ஸ்திரமற்ற தன்மையைத் தொடர்ந்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே 09ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால், பாராளுமன்றத்தில் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் பாராளுமன்றம் நுழைந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி, அதன் பின்னர் ஜூலை 13ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்று பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைய, வறிதான ஜனாதிபதி பதவிக்கு புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நேற்றையதினம் (19) வேட்புமனு கோரப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இன்று (20) ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தலின் வாக்களிப்பில்,

223 பேர் வாக்களித்திருந்தனர் இவற்றில் 4 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன அத்துடன் 2 பேர் வாக்களிக்கவில்லை.

இதனடிப்படையில் மொத்தமாக 219 வாக்குகள் அளிக்கப்பட்ட.

இவற்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகளும் டளஸ் அழகப்பெருமவுக்க – 82 வாக்குகளும் அநுர குமார திஸாநாயக்கவுக்கு – 03 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் டளஸ் அளகப்பெரும பெற்ற வாக்குகளை விட 52 மேலதிக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: