48 மணி நேரத்திற்குள் இலங்கையை கடக்கவுள்ள தாழமுக்கம் – வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை!

Saturday, December 24th, 2022

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதியில் காணப்படும் தாழமுக்கம் இன்று திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று (24) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.அ

அத்துடன் தாழமுக்க நிலை காரணமாக, மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (05N – 15N, 80E ௲ 85E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: