20 வருடங்களுக்கு முன் அமெரிக்கா அதிர்ந்த நாள் இன்று.!

Saturday, September 11th, 2021

உலக வல்லரசான அமெரிக்காவையே அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆட்டம் காண வைத்து இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

உலகின் தூங்காத நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் இதே திகதியில் 20 வருடங்களுக்கு முன்னர் காலை 8:46 மணியளவில் அதிர்ந்தது.

ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரட்டைக் கோபுரத்தை நோக்கிப் பறக்கிறது. சில செக்கன்களில், இரட்டைக் கோபுரத்தின் வடக்கு கட்டடத்தின் இடைப்பட்ட பகுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியது.

வோஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.

தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டைக் கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த விமானமும் அதே வோஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்டது.

இந்தத் தாக்குதலையடுத்து கட்டடங்கள் சரியத் தொடங்கின. தாக்குதல் காரணமாக இரட்டைக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது. நியூயோர்க் வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. கட்டடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின.

ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்களில் சிக்கிக் கொண்டிருந்தது ஒருபுறமிருக்க, வீதிகளில் சென்றவர்கள் மீதும் கட்டடத்தின் பாகங்கள் விழத் தொடங்கின.

இது நடந்து சில மணி நேர வித்தியாசத்தில் அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் மீது தாக்குதல் இடம்பெற்றது.

அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. அனைவரும் இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்பதைத் தேடத் தொடங்கினர்.

இந்த நிலையில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா. 19 பேரைக் கொண்டு இந்த தாக்குதலை அல் கொய்தா நடத்தியது.

மேலும், அல் கொய்தா பயங்கரவாதஅமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு அமெரிக்க டொலர் 25 மில்லியன் சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்.பி.ஐ அப்போது வெளியிட்டிருந்தது.

அந்த தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 2, 996 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலால் இரட்டைக் கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர்.

உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் உயிர்களும் பிரிக்கப்பட்டிருந்தன. இந்த தாக்குதலால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதத் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருப்பதை அறிந்த அமெரிக்கா அதிரடியாக விமானங்களின் மூலம் இராணுவத்தை அனுப்பி கொலை செய்தது.

2001 செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தாலும், ஒசாமா பின் லேடன் 2011ஆம் ஆண்டும் மே 2ஆம் திகதி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் சர்வ வல்லமை கொண்ட அமெரிக்காவில் இப்படியொரு தாக்குதல் நிகழ்ந்தது அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே அசைத்துவிட்டது.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதச் செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ‘உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை’ (Department of Homeland Security) என்றொரு துறையை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஈழமக்கள் ஜனநாயக கட்சி செய்த பெரும்பணிகளுக்கு யாழ்.குடாநாடே சாட்சி சொல்லும் - கட்சியின் நல்லூர் நிர்வ...
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி ...
மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முற்படுவோரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தனியார் பேருந்து உரிமையா...