20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தலைமையில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

Sunday, October 18th, 2020

அரசாங்கத்தின் அனைத்து அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது 20ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் நாளையதினம் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போதும், 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் ஆயம், தமது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த வியாக்கியானம் எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 வது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவித்ததை அடுத்து அதன் மீதான விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

வாக்கெடுப்பு தேவைப்படும் உட்பிரிவுகள் திருத்தப்பட்டவுடன், 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு 150 வாக்குகள் தேவைப்படும்.

தற்போது நாடாளுமன்றில் பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளி கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் 145 ஆசனங்களை கொண்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தேவையான எண்ணிக்கையிலான வாக்குகளைத் திரட்ட முடியும் என்று அரசாங்கத்தின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த திருத்ததில் மாற்றத்தை கோருகின்ற இந்தநிலையிலேயே இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: