18ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்!

Saturday, June 11th, 2016

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வருகைத்தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வயாவிளான் பகுதியில் உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையின் இராணுவத்தின் பிடியில் உள்ள ஒரு தொகுதி நிலப்பரப்பை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

அச்சுவேலி – சங்கானை வீதியுடன் தொடர்பு இணைப்பு வீதி அமைக்கப்பட்டு அதனை அண்மித்தாக இருக்கும் சுமார் 100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொள்ளவுள்ளார்.

குறிப்பாக புனரமைக்கப்பட்டு வரும் துரையப்பா விளையாட்டு அரங்கையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். மேலும் விளையாட்டுத்துறை சார்ந்த தரப்பினரையும் இதன்போது ஜனாதிபதி சந்தித்துப் பேசவுள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி காங்கேசன்துறை – நடேஸ்வராக் கல்லூரி மற்றும் அதனை அண்டிய 101 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகி 2 மாதங்கள் கடந்துவிட்டபோதம் வாக்குறுதியளித்தவாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் மக்கள் மீள்குடியேற அனுமதி வழங்கப்படவில்லை.

நடேஸ்வரக் கல்லூரி மற்றும் நடேஸ்வர கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த வாரமே செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி, ஏற்கனவே விடுவிப்பதாக அறிவித்த பகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கான அனுமதியை வழங்கவுள்ளார்.

அத்துடன் காங்கேசன்துறையில் இராணுவத்தினர் நடத்திவரும் தல்சவென உல்லாச விடுதி வரை உள்ள பகுதிகளில் சில ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அறிவிப்பையும் இந்த வருகையின்போது ஜனாதிபதி விடுவிப்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: