வடக்கு மாகாணசபையின் அசமந்தம்: வட்டக்கச்சி மருத்துவமனைக்கு புதிய கட்டடம் தொடர்பில் மக்கள் குமுறல்!

Wednesday, October 25th, 2017

ஒரு மருத்துவர் கூடக் கடமையில் இல்லாத வட்டக்கச்சி மருத்துவமனைக்கு 100 அடி நீளத்தில் மேலும் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாகாண அரசு பொருத்தமற்ற இடத்தில் பொருத்தமற்ற திட்டத்துக்கு அதிக செலவு செய்துள்ளது என அந்தப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் அந்த மக்கள் தெரிவித்ததாவது:

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் ஒரு புதிய மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் போதே வட்டக்கச்சி சந்தையை அண்டிய பகுதியிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர் அங்கேயே புதிய கட்டடத்தினை அமையுங்கள் எனக் கூறப்பட்டது. எனினும் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை. அங்கிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் வைத்தியசாலை அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் சில நூறு குடும்பங்களே தற்போது உள்ளனர்.

ஆனால் வட்டக்கச்சி சந்தையை அண்டி பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றனர். சந்தையை அண்டி வாழும் அத்தனை மக்களும் வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு வருவதனால் 2 மைல் தூரம் பேருந்திலேயே பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு பயணம் செய்து அங்கு மருத்துவர் இல்லை என்றால் அது பெரும் சிரமமாகவே இருக்கும். அதனாலேயே அதிக மக்கள் வாழும் சந்தையை அண்டிய பகுதியில் மருத்துவமனையை அமையுங்கள் என்று கூறப்பட்டது. ஒரு மருத்துவர் கூட கடமையில் இல்லாத அந்த மருத்துவமனைக்கு மேலும் புதிய கட்டடம் தற்போது 100 அடி நீளத்தில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தில் இயங்கும் வைத்தியசாலைக்கு இன்றுவரை ஒரு நிரந்தர மருத்துவர் கிடையாது. மருத்துவர் இருந்தாலும் நோயாளர்கள் இந்த வைத்தியசாலையை நாடுவதும் கிடையாது. மருத்துவர் உள்ளாரா? இல்லையா என்று தெரியாத நிலையில் பேருந்தில் ஏறுபவர்கள் நேரடியாக கிளிநொச்சிக்கே பயணிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு பொருத்தமற்ற ஓர் இடத்தில் பொருத்தமற்ற திட்டத்துக்காகப் பெருந்தொகைப் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செலவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கும் வைத்தியசாலைக்கு மருத்துவர்களை நியமித்தாலே அதன் திட்டம் வெற்றிகரமானதாக அமையும். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts: