13 ஆவது திருத்தம் – அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தகவல்!
Monday, February 6th, 2023
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக 08 ஆம் திகதி நாடாளுமன்றில் விளக்கமளிக்க உத்தேசித்துள்ள ஜனாதிபதி, அதற்கான ஆலோசனைகளை 04 ஆம் திகதிக்குள் வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரியிருந்தார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தாலும், சில கட்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டாலும், அவை எழுத்துப்பூர்வமாக முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்து என்ற ஜனாதிபதியின் யோசனைக்கு ஆதரவாகவோ அல்லது அதற்கு எதிராகவோ எந்தவித முன்மொழிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


