13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் மீண்டும் வலியுறுத்து!

Wednesday, October 6th, 2021

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ், அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட 13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கைக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நேற்று (05) புதுடில்லி திரும்பியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், குறித்த விடயங்களை அவர் வலியுறுத்தியதாக, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வான் மற்றும் கடல்வழி இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உட்பட, பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில், யாழ்ப்பாணத்துடனான இந்தியாவின் கலாசார மற்றும் சிவில் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன், இந்திய நிதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மையத்தைப் பராமரிக்க இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: