1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்தாகும் – அரசாங்கம் எச்சரிக்கை!

Tuesday, November 24th, 2020

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2021 ஜனவரிமுதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1,000 ரூபாயாக ஆக உயர்த்தப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்தார்.

இருப்பினும் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்கு அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படாவிட்டால் 1,000 ரூபாயை செலுத்த ஒப்புக்கொள்ள மாட்டோம் என தோட்ட நிறுவனங்கள் கூறியிருந்தன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், 1,000 ரூபாயினை செலுத்த மறுக்கும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என தெரிவித்துள்ளார்.

இருதரப்பிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 32 பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கு நிலத்தை அரசாங்கம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இருப்பினும், சில தோட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தங்கள் தொழிலாளர்களுக்கு ஈ.பி.எஃப். மற்றும் ஈ.டி.எஃப். நிதிகளை செலுத்துவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என கூறி 1,000 ரூபாயை செலுத்த மறுத்தால், அந்தந்த நிறுவனங்களுடனான அசல் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவோ அல்லது நிறுத்தவோ அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது - சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற...
பராமரிப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை...