வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது – ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!

Wednesday, October 16th, 2019

வானில் தோன்றும் வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது, ஆனாலும் அது தன் பிரகாசத்தை கொடுப்பதற்கு பின்னின்றதில்லை. அதேபோன்றே அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்தபோது தனது பணிகளை பிரகாசமாக முன்னெடுத்தார். தற்போது ஆட்சியில் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பொறுப்புடன் தனது மக்கள் பணிகளை சிறப்பாகவே முன்னெடுக்கின்றார் என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை சூரியமகால் மண்டபத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்சவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் –

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இணக்க அரசியலின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை செயற்றிட்டத்திற்கு அமைவாக முன்னெடுத்து வந்துள்ளது. அதனால், யுத்தத்தால் நலிவடைந்த எமது பிரதேசம் பாரிய அபிவிருத்தியைக் கண்டது.

அத்துடன், நாம் யுத்தத்தில் ஈடுபட்ட முன்னாள் புலி இயக்க உறுப்பினர்கள் சுமார் 12,000 பேர் வரை சமூகத்தில் இணைத்துள்ளோம். அதேபோன்று எமது பிரதேச இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு, சமூக அபிவிருத்தி என பல்வேறு விடயங்களையும் முன்னெடுத்திருக்கி;ன்றோம்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்குடன் அரசியல் உரிமை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினை என எமது செற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். நாம் அரசியல் நிலைப்பாட்டில் இலங்கை ஒரு மதசார்பற்ற நாடு என்பதிலேயே தெளிவாக இருந்து வருகின்றோம்.

நாம் அபிவிருத்தியை மேற்கொண்ட பொழுது, அரசியல் கைதிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்த போது எம்மை விமர்ச்சித்தவர்கள் இன்று என்ன செய்கின்றார்கள்? இவர்கள் அரண்மனையை ஏற்றிய ஜனாதிபதி ஆனந்தசுதாகரனையாவது விடுவித்தாரா? அவரது பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? இதனை இன்று ஆட்சி அதிகாரத்திலுள்ள வர்க்கம் அக்கறை கொண்டு நடவடிக்கையை மேற்கொண்டதா? எம்மீது மிகவும் மோசமான கீழ்தரமான விமர்சனங்களை மேற்கொண்டவர்கள், எம்மை ஒரங்கட்ட முந்தியடித்தவர்கள் கடந்த நான்கரை வருடங்களில் எமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்க முனைந்தவர்கள் ஏன் எம்மீது சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவில்லை. இன்று இருப்பது இவர்களது தயவிலுள்ள ஆட்சி. அந்த ஆட்சி அதிகாரத்தில் நேர்மையாக, நீதியாக, சட்டபூர்வமாக நீதிமன்றம் சென்று எம்மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். உங்களது சட்டவல்லுனர்கள், சாணக்கியர்கள் இப்பொழுதும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறே கோருகின்றோம்.

ஆனால் அது உங்களால் முடியாது ஏனெனில், நீங்கள் அரசியல் காரணங்களுக்காக எம்மீது அள்ளிவீசிய அவதூறுகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுமே. இன்றும் சொல்லுகின்றோம் இன்னும் காலஅவகாசம் இருக்கின்றது. நீங்கள் அவதூறு பொழிவதை விட நீதித்துறையை நாடி சட்டநடவடிக்கை எடுங்கள். உங்கள் பேச்சுக்கள் எல்லாம் பொய்த்து போனதன் காரணமாகவே நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சந்தர்ப்பத்திலும் மக்கள் எம்பக்கம் அலை, அலையாக அணிதிரண்டுள்ளனர்.

நாம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணக்க அரசியலை மேற்கொண்ட போது, வடக்கில் அரச வெற்றிடங்களுக்கு எமது இளைஞர் யுவதிகளுக்கே நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளைச் செய்தோம். ஆனால், நல்லாட்சி என்கின்ற சொல்லாட்சியில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கே அரச வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை இந்த ஆட்சிக்கு முண்டு கொடுப்பவர்கள் தட்டிக் கேட்காமல் கூட்டிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், எமது இளைஞர் யுவதிகள் படித்து விட்டு வேலைக்காக அலைந்து திரிகின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும். நிச்சயம் நாம் மாற்றுவோம். அதற்கு மக்களாகிய நீங்கள் செய்வோம், செய்விப்போம் என்ற இலக்குடன் இந்த தேர்தலை சந்தித்துள்ளோம். அதற்கு பக்கபலமாக நீங்கள் இருக்க வேண்டுமென்பதை தெரிவித்துக் கொண்டு, வானில் தோன்றும் வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது. வெண்ணிலா பிரகாசிப்பதற்கான தூரம் அதிகமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உட்பட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related posts: