முஸ்லிம் தீவிரவாதிகள் மீதான தடை தொடரும் – பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர!

Sunday, August 25th, 2019


அவசரகாலச் சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், அந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்கள் மீதான தடை மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பாதிக்கப்பட மாட்டாது என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதோடு இரண்டு தீவிரவாத குழுக்கள் மீதான தடை இ.ரத்து செய்யப்படும் என்றும் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் மறுத்துள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுவெடிப்பின் பின்னர் தேசிய அவசரகால நிலைமை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதே மில்லத்து இப்ராஹிம் மற்றும் விலஜத் அஸ் செய்லணி ஆகிய தீவிரவாத குழுக்கள் நாட்டில் தடை செய்யப்பட்டன.

இருப்பினும், இந்த குழுக்கள் மீதான தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால விதிமுறைகளை திரும்பப் பெறுவது கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை , பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவசரகால விதிமுறைகளை இரத்து செய்வதன் விளைவாக பயங்கரவாத குழுக்கள் மீதான தடை பாதிக்கப்படாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: