திலீபனின் நினைவுகள் அரசியல் சுயலாபங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது – சபையை புறக்கணித்து ஈ.பி.டி.பி வெளியேற்றம்!

Thursday, September 19th, 2019

திலீபனின் உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய இயக்கங்களின் போராளிகளின் மரணத்தை யாரும் சுயநலன்களுக்காக அரசியலாக்கக் கூடாது என தெரிவித்து யாழ் மாநகரசபை கூட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளது.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் கடந்தவாரம் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கான விவாதம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது திலீபனின் நினைவிடத்தை யாழ் மாநகரசபை பொறுப்பெற்று நெறிப்படுத்த வேண்டும் என பிரேரணை முதல்வரால் முன்வைக்கப்பட்டது.

இதன்போது – நினைவு தினங்கள் என்பது அரசியலுக்காக நினைவு கூரப்படுவதொன்றல்ல. அது உணர்வகளால் மதிக்கப்பட்டு நினைவுகூரப்படவேண்டியதொன்றாகும்.

ஆனால் தமிழ் மக்களின் இழப்புக்களை தமது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் தொடர்ந்தும் இதை செய்ய முயற்சிக்கிறார்கள்.

தமிழ் மக்களின் உரிமை போராட்ட வரலாற்றில் திலீபனுடன் இன்னும் பல இயக்கங்களின் போராளிகள் உயிர் தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அவர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

பணப்பெட்டி அரசியலையும்  சவப்பெட்டி அரசியலையும் செய்யும் அரசியல் வாதிகளுக்கு போராளிகள் மற்றும் மக்களின் மரணங்களே முதலீடாக இன்றுவரை இருந்துவருகின்றது. இந்தநிலை மாறி எமது மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய வாழ்வியல் நிலைமையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  இதையே வென்றெடுக்கவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் முயன்று வருகின்றோம்.

அந்தவகையில் இந்த பிரேரணை அரசியலுக்கானதாக இருப்பதால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களாகிய நாம் இப்பிரேரணையை எதிர்ப்பதுடன் சபை நடவடிக்கையையும் புறக்கணிப்பு செய்கின்றோம் என தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: