சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டவியல் திணைக்களம் !

Thursday, December 5th, 2019


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டை அண்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற நிலை காரணமாக இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் உள்ள 25 அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதற்காக பொலிசார் மற்றும் முப்படையினரி;ன் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அனர்த்தம் ஏற்படலாமென இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு கூடுதலான அளவு நீர் வந்து சேர்வதால், அதன் வான் கதவுகளை திறக்க நேரிட்டிருப்பதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பிரதான நீர்ப்பாசனப் பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்தார். இதன்படி இன்றும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி வளவ்வ கங்கையை அண்டியுள்ள தாழ்நில பிரதேச மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

பதுளையில் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து, பதுளை – பஸ்ஸறை வீதி ஆபத்து மிக்கதாகத் திகழ்கிறதென மாவட்ட இடர்காப்பு நிலையம் அறித்துள்ளது. அந்த வீதி இன்று காலை வரை மூடப்பட்டிருக்கும். எல்ல – வெல்லவாய வீதியும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது. அங்கு மலையில் இருந்து கற்கள் உருண்டு விழக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இது பற்றி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts: