இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

Wednesday, October 30th, 2019


இலங்கைக்கு தெற்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையானது அரேபியக் கடற்பரப்புக்கு நகர்ந்து தற்போது இலங்கைக்கு தென்மேற்காக நிலை கொண்டுள்ளது.

இது மேலும் விருத்தியடைந்து நாட்டை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் கடல் திடீரென்று கொந்தளிப்பதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக இன்று அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

தென், ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளம் மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts: