2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை 60% குறைக்க வேண்டும் – சமூக ஆர்வல;கள் வலியுறுத்து!

Monday, April 22nd, 2024

சர்வதேச புவி தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, காடழிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக புவி வெப்பமடைவதும், இயற்கை வளங்கள் குறைந்து வருவதும் மிகப் பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

அந்த வகையில் 54ஆவது புவி தினத்தை கொண்டாடும் இன்றைய நாளுக்கான கருப்பொருள் “பிளான்ட் vs பிளாஸ்டிக்” என்பதுடன், பிளாஸ்டிக் பயன்பாடு இயற்கைக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் EARTHDAY.ORG வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் பிரத்தியேக டூல் (Tool) யை உருவாக்கியுள்ளது.

புவி தினத்தின் கருப்பொருளான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு சித்திரத்தில் இடம்பெற வைத்துள்ளது.

அத்துடன் 2040ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியையும் 60% குறைக்க வேண்டும் என்றும் EARTHDAY.ORG கோரிக்கை விடுத்துள்ளது.

மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக, 1970ஆம் ஆண்டளவில் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நகரங்களிலும் சுமார் இரண்டு கோடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக உருவான சர்வதேச புவி தினம் தற்போது 192 நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதனால் புவியின் வெப்பநிலை அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும். அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும் எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்படுவது போன்று, புவி மாசடைவதை தடுக்கும் நடவடிக்கையும் தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புவியின் வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றது.

உலகில் ஒவ்வொரு நாளும் 700இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் தீவிர மாசடைந்த பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

புவியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் புவியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

புவியின் பாதுகாப்பிற்காக மாத்திரமின்றி மனிதனின் பாதுகாப்பிற்காகவும் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், எம்மை வாழ வைக்கும் புவி ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச புவி தினத்தில், நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டை குறைத்து, புவித்தாயைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்

000

Related posts:


தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பி...
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
கனேடிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரை...